Header Ads

வரலாற்று சாதனையை பதிவு செய்த இந்திய அணி!

 


இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் மைதானத்தில் நடந்தது.

இந்தப் போட்டியில் கடுமையான போராட்டத்துக்குப் பிறகு இந்தியா வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது. இந்த போட்டியில் வென்றதன் மூலம், நான்கு போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரையும் 2-1 என்ற கணக்கில் இந்தியா தனதாக்கியுள்ளது.

இந்த நான்காவது டெஸ்ட் போட்டியில், இந்தியா சார்பில் களமிறங்கிய பந்துவீச்சாளர்கள் போதுமான அளவுக்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அனுபவம் இல்லாதவர்கள் என்றாலும், போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் அவர்கள் ஆதிக்கம் செலுத்தியது சமூக ஊடகங்களில் பரவலான பாராட்டை பெற்றது.

இந்த போட்டியில், இந்திய பந்துவீச்சாளர்களிலேயே அதிக டெஸ்ட் அனுபவம் கொண்ட பந்துவீச்சாளர் என்றால் அவர் மொஹம்மத் சிராஜ் தான். பேட்டிங்கைப் பொறுத்தவரை இந்தியாவின் நட்சத்திர பேஸ்மேனான விராட் கோலி பங்குபெறவில்லை.

முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 369 ரன்களை எடுத்திருந்தது. மார்னஸ் 108 ரன்களையும், கேமருன் க்ரீன் 47 ரன்களையும், மேத்யூ வேட் 45 ரன்களையும், டிம் பெயின் 50 ரன்களையும் விளாசினர்.

நடராஜன், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

அடுத்து களமிறங்கிய இந்தியா 336 ரன்களை எடுத்தது. ரோஷித் சர்மா 44 ரன்களையும், வாஷிங்டன் சுந்தர் 62 ரன்களையும், ஷர்துல் தாக்கூர் 67 ரன்களையும் அடித்தனர். இந்தியாவின் டாப் ஆர்டர் பேட்ஸ்மென்கள் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பிய போது, சுந்தர் மற்றும் ஷர்துல் இணை, நிலைத்து நின்று ஆடி ரன் குவித்தற்கு சமூக ஊடகங்களில் பலரும் பாராட்டு தெரிவித்தனர்.

ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சைப் பொறுத்தவரை, ஹேசில்வுட் ஐந்து விக்கெட்டுகளையும், ஸ்டார்க் மற்றும் கம்மின்ஸ் ஆகியோர் தலா இரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

நான்காவது நாளான நேற்று (ஜனவரி 18) ஆஸ்திரேலியாவின் இரண்டாவது இன்னிங்ஸை 294 ரன்களுக்கு முடித்து வைத்தது இந்தியா. டேவிட் வார்னர் 48 ரன்களையும், ஸ்டீவன் ஸ்மித் 55 ரன்களையும் அடித்தனர்.

19.5 ஓவர்களை வீசி 73 ரன்களைக் கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார் மொஹம்மத் சிராஜ். இதில் 5 ஓவர்கள் மெய்டன் வீசப்பட்டதும் அடக்கம்.

ஷர்துல் தாக்கூரும் தன் பங்குக்கு 19 ஓவர்களை வீசி 61 ரன்களைக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். வாஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

328 ரன்கள் அடித்தால் வெற்றி என்கிற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் களமிறங்கி இரண்டு ஓவர்களைக் கூட முழுமையாக எதிர்கொள்ளவில்லை, அதற்குள் மழை வந்து ஆட்டம் தடைபட்டது. அப்படியே அன்றைய நாளும் முடிவுக்கு வந்தது.

நான்காவது நாள் முடிவில் இந்தியா 1.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி நான்கு ரன்களை எடுத்திருந்தது.

ஐந்தாவது மற்றும் கடைசி நாளான இன்று (ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை) மீண்டும் ரோஹித் சர்மா, சுப்மன் கில் இணை களமிறங்கியது.

கம்மின்ஸ் வீசிய 9-வது ஓவரில் ரோஹித் சர்மா தன் விக்கெட்டைப் பறிகொடுத்தார். அடுத்து வந்த புஜாரா விக்கெட்டை எளிதில் இழக்காமல் நிதானம் காட்டினார்.

புஜாரா – கில் இணை அழுத்தமாக பிரிஸ்பேன் மைதானத்தில் காலூன்றியது. 240 பந்துகளை எதிர்கொண்டு 114 ரன்களைக் குவித்தது இந்த இணை. சுப்மன் கில் 91 ரன்களை எடுத்து லயோன் வீசிய 48-வது ஓவரில் தன் விக்கெட்டை இழந்தார். அப்போது இந்தியா 132 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

அடுத்து அஜிங்க்யா ரஹானே களமிறங்கினார். 24 ரன்கள் எடுத்திருந்தபோது கம்மின்ஸின் பந்தில் அவர் ஆட்டமிழந்தார். 167-க்கு 3 விக்கெட் இழந்தது இந்தியா.

மறு பக்கம் புஜாரா தன் விக்கெட்டை விட்டுக் கொடுக்காமல் ரன்களைக் குவித்துக் கொண்டிருந்தார். ரிஷப் பண்ட் – புஜாரா உடன் கை கோர்த்து நிலைத்து நின்று ஆடினார். இந்த இணை 141 பந்துகளை எதிர்கொண்டு 61 ரன்களைக் குவித்தது. புஜாரா தன் அரை சதத்தைப் பதிவு செய்தார்.

81-வது ஓவரில் கம்மின்ஸின் பந்தில் 56 ரன்களோடு பெவிலியன் திரும்பினார் புஜாரா. அப்போது இந்தியா 228-க்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

அடுத்து களமிறங்கிய மயங்க் அகர்வால் ஒன்பது ரன்களில் கம்மின்ஸ் வீசிய 87-வது ஓவரில் தன் விக்கெட்டைப் பறிகொடுத்தார். வாஷிங்டன் சுந்தர் 22 ரன்களுக்கு லயோன் வீசிய 96-வது ஓவரில் விக்கெட்டை இழந்தார். ஷர்துல் தாக்கூர் 2 ரன்களுக்கு தன் விக்கெட்டை இழந்தார். இந்தியா 325-க்கு 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது. ஆனால் மறுபக்கம் ரிஷப் பண்ட் 138 பந்துகளுக்கு 89 ரன்களை குவித்து இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார்.

ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சாளர்களில் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளையும், லயோன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அதிரடி காட்டினர். இருப்பினும், அது அந்த அணியின் வெற்றிக்கு வித்திடவில்லை.

நான்கு போட்டிகளைக் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இரண்டு போட்டிகளில் வென்று ஒரு போட்டியை டிரா செய்து வென்றிருக்கிறது இந்தியா.

No comments

Powered by Blogger.